விசாகப்பட்டினம்: பிரபல கூகல் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய ரூ.88,000 கோடி (10 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப மையம் அமைப்பதிலும், செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களிலும் இந்த முதலீடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
கூகல் துணை நிறுவனமான ரெய்டன் இன்ஃபோடெக் இந்தியா லிமிடெட் மேற்குறிப்பிட்ட முதலீட்டைச் செய்ய உள்ளது.
கூகல் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
நெல்லூர் மாவட்டம் அருகே மேற்கொள்ளப்பட இருக்கும் சில முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்ட அவர், தகதர்த்தி, சென்னை விமான நிலையங்கள், திருப்பதி விமான நிலையத்துடன் இணைப்பை மேம்படுத்தும் என்றார்.
சென்னை - ஹைதராபாத், சென்னை - அமராவதியை இணைக்கும் புல்லட் ரயில் திட்டங்கள் வட்டாரப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளன. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும்,” என்றார் சந்திரபாபு நாயுடு.