அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கான சட்டங்களை அரசு தவறாகப் பயன்படுத்துவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகித் அலி என்பவரை, ஆறு மாதக் காலத்திற்கு மாவட்ட எல்லையில் இருந்து வெளியேற்ற கோண்டா மாவட்ட ஆட்சியர், ஆணையர் உத்தரவிட்டனர். அதற்கு எதிராக ஜாகித் அலி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு, மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
சமூக விரோதிகளையும் குண்டர்களையும் கட்டுப்படுத்தவே குண்டர் சட்டம் இயற்றப்பட்டது என்றும் ஆனால், அம்மாநில அரசு அப்பாவி மக்களுக்கு எதிரான அடக்குமுறை கருவியாகவும் துன்புறுத்தும் நோக்கத்துடனும் தொடர்ந்து அச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் நீதிபதி கண்டித்தார்.
மனுதாரர் மீது 2010, 2020 ஆகிய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 2010ஆம் ஆண்டு வழக்கில் மனுதாரர் 2017ஆம் ஆண்டிலேயே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி ஒருவரை ‘குண்டர்’ எனக் கூறுவது சட்டப்படி செல்லாது என்றும் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டின் ஒரேயொரு பழைய வழக்கிற்கு, 2026ஆம் ஆண்டில் திடீரென மாவட்ட எல்லைக்கட்டுப்பாடு விதிப்பதற்கு முறையான எந்தக் காரணமும் இல்லை என்றார் அவர்.
காவல்துறை சரியான தகவல்களைத் தெரிவிக்காமல் தவறான பிம்பத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளது என்றும் பொது அமைதியைச் சீர்குலைக்கும் மிகத்தெளிவான ஆதாரங்கள் இருக்கும்போது மட்டுமே குண்டர் சட்டத்தை அரிதாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், முறையான விசாரணையின்றி தண்டனை வழங்கும் நோக்கில் அச்சட்டத்தைப் பயன்படுத்துவது நீதிக்கு எதிரானது என்றும் அது கண்டித்துள்ளது.

