சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, ஆந்திராவில் மீட்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பணிமனையிலிருந்து திருப்பதிக்குச் செல்லத் தயாராக இருந்தது பேருந்து. ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் அது உரிய இடத்தில் காணப்படாததால் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையிடம் புகார் கொடுத்தார் மேலாளர் ராம்சிங்.
காவல்துறையினர் கண்காணிப்புப் படக்கருவிகளின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காவல்துறையினர், பேருந்து நெல்லூரில் இருப்பதாகத் தமிழகக் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்து நெல்லூர் சென்ற காவல்துறையினர் பேருந்தை மீட்டனர். அத்துடன் பேருந்தைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒடிசாவைச் சேர்ந்த ஆடவரையும் காவல்துறையினர் தமிழகத்திற்குக் கொண்டுவந்தனர்.
24 வயது ஞானகுரு சாகு எனும் அந்தக் காது கேளாத, வாய் பேச முடியாத ஆடவரைக் காவல்துறை விசாரித்து வருகிறது.

