புதுடெல்லி: பிரதமர் சிறப்புத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ஏறக்குறைய 72,000 பொது மின்சார வாகன மின்னூட்டி நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரசு வளாகங்கள், நெடுஞ்சாலைகள், பொதுப் போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்களில் மின்னூட்டம் உள்கட்டமைப்பை நிறுவும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசின் இந்த நடவடிக்கை கைகொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னூட்டி நிலையங்களை அமைக்க மத்திய அரசு நூறு விழுக்காடு மானியம் வழங்குகிறது. எனினும், இலவச பொது அணுகலை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து முனையங்கள், மெட்ரோ நிலையங்கள், நகராட்சி வாகன நிறுத்துமிடங்கள், பொதுத்துறை துறைமுகங்கள், அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், சுங்கச்சாவடிகள் போன்ற அதிக போக்குவரத்து உள்ள பொது இடங்களில் அமைக்கப்படும் மின்னூட்டி நிலையங்களின் உள்கட்டமைப்புச் செலவுகளில் 80%, மின்னூட்டிக் கருவிகளுக்கான செலவுகளில் 70% மானியமாக வழங்கப்படும்.
இரண்டு தவணைகளாக மானியத் தொகை பெற முடியும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள், மாநிலத் தலைநகரங்கள், ‘ஸ்மார்ட்’ நகரங்கள், பெருநகரத்துடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் நகரங்கள் மற்றும் அதிக அடர்த்தி கொண்ட போக்குவரத்து வழித்தடங்களில் அமைக்கப்படும் மின்னூட்டி நிலையங்களுக்கு மானியம் வழங்குவதில் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.