அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகார் முதல்வர் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணி

அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகார் முதல்வர் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணி

2 mins read
60af1ce6-6f9a-4cff-a2ea-adcee0e6c1eb
பாட்னாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி திடலில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, மாநில முதல்வர் இல்லத்தை நோக்கிச் சென்றபோது போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

பாட்னா: பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததுடன், முந்தைய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைநகர் பாட்னாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அம்மாநில முதல்வரின் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.

பாட்னாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி திடலில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, மாநில முதல்வர் இல்லத்தை நோக்கிச் சென்றபோது போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பேரணியைத் தடுக்க காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் பல இடங்களில் இரும்புத் தடுப்புகளை அமைத்திருந்தனர். இருப்பினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பியபடி மாணவர்கள் தடுப்பரண்களைத் தாண்டிச் செல்ல முற்பட்டனர்.

இதனால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தண்னீர்ப் பீய்ச்சியடித்து, தடியடியும் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பின் தலைவர் சவுரவ் குமார், அரசுடன் நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றார்.

பீகார் முதல்வர் அல்லது கல்வி அமைச்சரையோ நேரடியாகச் சந்தித்துப் பேச அனுமதித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் பீகார் அரசு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.

அதன்படி, கல்வி நிலையங்களில் மாதம்தோறும் 4வது செவ்வாய்க்கிழமை மாணவர் உதவி முகாம் நடத்தப்படும் என்றும் புகார்களைப் பதிவு செய்யத் தனி இணையதளமும் ‘1100’ என்ற உதவி எண்ணும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது என மாணவர்கள் கூறியுள்ளதால் பாட்னாவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்