குமரி: சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் இத்திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுடன் இணைவதன் மூலம் இத்திட்டத்தின் அறிவியல் திறன்கள் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுவதாக அவர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
“சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவிதச் சேதாரமும் இன்றி விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. இதன் மூலம், இந்தச் சாதனையை படைத்த உலகின் நான்காவது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு கிடைத்தது.
“சந்திரயான்-5 திட்டம் நிலவை முழுமையாக ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டது. எனவே, சிறிய வகை ரோவர் இதில் இடம்பெறாது. அதற்குப் பதிலாக 250 கிலோ எடையுள்ள பெரிய ரோவரை அனுப்பி சந்திரனின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம்,” என்று நாராயணன் குறிப்பிட்டார்.
‘சந்திரயான்-4’ திட்டத்தை 2027க்குள் நிறைவேற்ற இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சந்திரயான்-5 மற்றும் 6வது திட்டங்களை நிறைவேற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் ககன்யான் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.

