சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அத்திட்டப் பணி தொடர்பில் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் அனைத்துலக விமான நிலையம் செயல்பட்டுவரும் நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு இத்திட்டத்தை முதன்முதலில் அறிவித்ததில் இருந்தே அதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசின் தொழில்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் அங்குள்ள நீர்நிலைகளும் வேளாண் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குக் கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பித்திருந்தது. அதனை ஆய்வு செய்த மத்திய அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் விமானப் போக்குவரத்துத் துறையின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ராம் மோகன் நாயுடு புதன்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனைத் தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டக் கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி (S$1.78 பில்லியன்) செலவில் வரும் 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தம் ரூ.27,400 கோடி செலவில் பரந்தூர் விமான நிலையக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.