புதுடெல்லி: துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அண்மையில் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு அளித்ததாக பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டிய இந்திய அரசு, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது இந்தியா மீது தாக்குதல் நடத்த ஆளில்லா வானூர்திகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது துருக்கி.
இந்நிலையில், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளதற்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.
துருக்கியில் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்துள்ள இந்திய வணிகர்கள் அதை நிறுத்தினர். அந்நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் கடிவாளம் போடும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன் ஓர் அங்கமாகவே, துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு இண்டிகோ நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக, துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இரண்டு யோயிங் விமானங்களை குத்தகை முறையில் பெறப்பட்டு, டெல்லி, மும்பை, நகரங்களில் இருந்து இவை இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மே 31ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளுமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேசமயம், பயணிகளுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதை மனத்திற்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கான விமானச் சேவைக்கு மூன்று மாத தற்காலிக நீட்டிப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 30) இது தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டது.