தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனிமொழி, சசி தரூருக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய மத்திய அரசு

2 mins read
87bf760a-7353-486f-9d24-984171037d13
காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கியமான வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்ட ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வெடித்தது. அது போராக மாறுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதன்பின்னர் பதற்றம் தணிந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான மோதல் குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் முக்கியமான வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்குத் தலைமை தாங்கும் ஏழு எம்பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், திமுக எம்பி கனிமொழி, என்சிபி எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் அரசதந்திர நடவடிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களின் பெயர்களை நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மிக முக்கியமான தருணங்களில், இந்தியா ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ரவி சங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் மற்ற ஐவர்.

இவர்கள் தலைமையிலான ஒவ்வொரு குழுவிலும் ஐந்து முதல் ஆறு எம்பிக்கள் இருப்பார்கள் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மே 22ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டவும், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அனைத்துலக ஆதரவை ஒருங்கிணைக்கவும் இந்திய அரசு இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்