சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 20,471 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வாணயத்தின் வாயிலாக 2025ஆம் ஆண்டு பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 9,770 கூடுதல் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் 11,809 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுப் பணிகளின் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டில் 1,007 பட்டியலின, பழங்குடியினருக்கான (SC/ST) பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்களின் விவரங்களைத் தேர்வர்கள் இணையவழியில் அறிந்துகொள்ளும் வகையில், 2025 கலந்தாய்வு முதல் தேர்வாணையத்தின் வலையொளி (யூ-டியூப்) தளம் மூலம் கலந்தாய்வு நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
தேர்வர்கள் தங்கள் விடைத்தாள்களைத் தேர்வாணைய இணையத்தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணங்களை யுபிஐ (UPI) மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்வர்கள் தங்கள் மனுக்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

