போபால்: இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் அவ்வப்போது ஆடம்பரமாகச் செலவுகள் இடம்பெறும். இருப்பினும் அது பெரிய அளவில் சர்ச்சையாக ஆகாது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்துக் கூட்டத்தில் செலவிடப்பட்டுள்ள கணக்குப் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மத்தியப் பிரதேசம், பாத்வாகி கிராமத்தில் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் 30 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள், பழங்கள் ஆகியவை பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்குச் சாப்பிட்டதற்காகக் கணக்குப் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 கிலோ கிராம் முந்திரி, 3 கிலோ கிராம் உலர் திராட்சைகள், 3 கிலோ கிராம் பாதாம் பருப்புகள், 9 கிலோ கிராம் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள், 5 வாழைப்பழச் சீப்புகள், 30 கிலோ கிராம் மிக்சர், பூந்தி, இனிப்பு வகைகள் முதலியவற்றுக்குக் கணக்கு எழுதப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கணக்குப் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பேசுபொருளாகி உள்ளது.
மக்களின் வரிப் பணம்தானே செலவு செய்கிறோம் என்ற அலட்சிய எண்ணத்துடன் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது என்று இணையவாசிகள் பதிவிட்டனர்.