திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படாதது குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் 16வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் உரையுடன் வெள்ளிக்கிழமையன்று (மே 29) தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலின் தொடக்கப் பத்திகளை இசைக்குழுவினர் இசைத்தனர். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து மக்கள் மாளிகைக்கு வந்த பிறகு இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் அர்லேகர், “ஆளுநர் அவையில் இருக்கும்போதெல்லாம் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும். ஆனால், அந்தப் பாடல் பாடப்படவில்லை. வெறும் இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் திருவனூர் ராதாகிருஷ்ணனிடம் பேசினேன். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறேன். நிலைமை இனி எவ்வாறு மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, “வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்பதில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணங்களை மட்டும் பாடினால் போதும். அதோடு, அந்தப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை,” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன், “வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை என்பது முன்பே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.
“வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. பதவியேற்பு விழாவின்போது அப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அது நடந்திருக்கக்கூடாது. அந்த அனுபவத்துக்குப் பிறகு மாநில அரசு ஒரு கடுமையான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சரியான நிலைப்பாடு,” என தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

