புதுடெல்லி: மாநில அரசுகள் தாக்கல் செய்யும் மசோதாக்கள்மீது முடிவெடுக்க ஆளுநருக்கும் அதிபருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்தது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல், சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்புதல் அல்லது மசோதாவை அதிபர் பரிசீலனைக்கு அனுப்புதல் போன்றவற்றைத் தீர்மானிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
மேலும், மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்குக் காலக்கெடு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் மசோதா மக்களாட்சிக்கு விரோதமாகவோ அல்லது அடிப்படை உரிமையை பறிக்கும் வகையிலோ இருந்தால் அதனை நிறுத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.