லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5,000 அரசுப் பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி அம்மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி 5,000 அரசுப் பள்ளிகளை மூட உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஐம்பது மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைப்பதே அரசின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 29,000 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
இந்நிலையில், தமது எக்ஸ் பதிவு ஒன்றில், குழந்தைகளிடம் இருந்து கல்வி உரிமை பறிக்கப்படுவது ஏன்? என பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
“அம்மாநிலத்தில் உள்ள பாஜக அரசின் இந்த உத்தரவு கல்வி உரிமைக்கு எதிரானது மட்டுமல்லாமல், தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உத்தரப் பிரதேச அரசு இணைப்பு என்ற பெயரில் சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது. ஆசிரியர் அமைப்புகளின் கூற்றுப்படி, அரசாங்கம் ஏறக்குறைய 27,000 பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளது.
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் கல்வியை அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
“பள்ளிகள் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தால், சிறு குழந்தைகள், குறிப்பாக பெண்கள், பள்ளியை அடைய பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வது எப்படி சாத்தியமாகும்?” என்றும் தமது பதிவில் பிரியங்கா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

