இந்தியாவுடன் படிப்படியாக வளரும் உறவு: கனடா அமைச்சர் தகவல்

1 mins read
836e4e5a-4fe6-4876-9225-ad21cf2e5481
அனிதா ஆனந்த். - படம்: ஊடகம்

டொரான்டோ: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் படிப்படியாக வளர்ந்து வருவதாக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையேயான உறவை வளர்ப்பதில் முதல் நடவடிக்கையாக, தற்காப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இரு நாடுகளுக்கும் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நடவடிக்கையாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் குறித்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் தொடர்பாக, இருதரப்பிலும் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,” என்று அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளின் அடுத்தக் கட்டமாக, ‘ஜி20’ மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் மூலம் ஆக்கப்பூர்வமான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பாக இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சீர்குலைந்ததுடன், தூதரக அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டனர்.

எனினும், கனடா நாட்டுப் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றதும் நிலைமை மாறியுள்ளது. அவரது அமைச்சரவையில் உள்ள வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அண்மையில் டெல்லி வந்து சென்றார்.

குறிப்புச் சொற்கள்