புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதி மீது பிரம்மாண்ட அணை கட்ட இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சி அளித்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 30) விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிந்து நதிநீர் எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தலா மூன்று நதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
அவற்றுள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள செனாப் நதிமீது இந்தியா பிரம்மாண்டமான சாவல்கோட் நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இருதரப்பு ஒப்பந்தத்தை மீறாத வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்கு ஏறக்குறைய ரூ.22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முயன்றது. பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.
தற்போது பாகிஸ்தானுடன் மோதல் நிலவுவதால் இந்தச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய அரசு விரும்புகிறது. இதையடுத்து, தேசிய நீர்மின் கழகம் இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜம்மு காஷ்மீரின் மின்மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அக்கழகம் தெரிவித்தது.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக 3,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைப் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் வன ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.