கணவனைப் பிரிந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற முன்னாள் நீதிபதி

கணவனைப் பிரிந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற முன்னாள் நீதிபதி

2 mins read
e0573e6b-fa69-4ea7-81e2-68beaec5c8e5
மணவிலக்கு பெற்று தாய்வீடு திரும்பிய பிரணிதாவை மாலையிட்டு, இனிப்பு வழங்கி வரவேற்ற குடும்பத்தினா். - படம்: தினமணி

மீரட்: மணவிலக்கு பெற்ற மகளுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ள புதுமையான சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா. இவரது மகள் பிரணிதா முதுநிலைப் பட்டதாரி.

இவருக்கும் ராணுவ அதிகாரி ஒருவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணமான சில மாத காலத்திலேயே கணவர் வீட்டில் பிரணிதா உடல், மன ரீதியாகக் கொடுமைகளுக்கு ஆளானார்.

ஒரு குழந்தை பிறந்த பின்னரும் நிலைமை மாறாததால், துணிச்சலுடன் மணவிலக்கு கோரி நீதிமன்றத்தை நாடினார் பிரணிதா.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை பிரணிதாவிற்கு மணவிலக்கு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கமாக, மணவிலக்கு என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், பிரணிதாவின் குடும்பத்தினர் அதனை ஒரு புதிய தொடக்கமாகக் கொண்டாடினர்.

நீதிமன்ற வாசலிலேயே அவருக்கு மாலை அணிவித்து, ஆடிப் பாடி உற்சாகத்துடன் தாய் வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தந்தை ஞானேந்திர குமார் கூறுகையில், “மகள் என்பவர் யாருடைய உடைமையும் அல்ல. சமூகம் என்ன சொல்லும் என்று அஞ்சுவதைவிட, நம் மகளின் மகிழ்ச்சியும் கண்ணியமுமே முக்கியம். நரகமாக மாறிய ஒரு வாழ்க்கையிலிருந்து அவர் மீண்டுவந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முன்னாள் கணவரிடமிருந்து எவ்வித பேணற்படியையோ உடைமைகளையோ எதிர்பார்க்காமல் வெறுங்கையுடன் வெளியேறிய பிரணிதா, “பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாகச் சகித்துக்கொள்ளக் கூடாது. கல்வி கற்று சொந்தக் காலில் நிற்பதே நமக்கான பாதுகாப்பு,” என்று மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்