வெராவல்: ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோம்நாத் கோயிலின் மாபெரும் யாத்திரையில் பங்கேற்று பிரதமர் மோடி மேலும் சிறப்பித்துள்ளார்.
குஜராத்துக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் வெள்ளிக்கிழமை சோம்நாத்துக்கும் சென்றார்.
அப்போது சோம்நாத் கோவிலின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் நடந்த வண்ணமய வானூர்திக் காட்சிகளை அவர் பார்வையிட்டார்.
இந்த நிலையில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் வெராவல் நகர் அருகே அமைந்த பிரபல சோம்நாத் மகாதேவ கோவிலுக்கு ஞாயிறு காலை (ஜனவரி 11) சென்றார்.
இதற்காக ஹெலிபேட்டில் வந்திறங்கிய பிரதமர் மோடியை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் நேரில் சென்று வரவேற்றார்.
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூசைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்பின்னர் சோம்நாத் கோவிலில் இருந்து புறப்பட்ட சவுரியா யாத்திரையில் அவர் பங்கேற்றார்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக சோம்நாத் கோவில் தாக்கப்பட்டபோது, எதிர்த்து போராடி உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் 200 குதிரைகள் முன் செல்ல யாத்திரை தொடங்கியது.
1,026ஆம் ஆண்டின் முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் முடிந்த வரலாற்றை குறிக்கும் வகையில் நடந்த சவுரியா யாத்திரையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

