ஒரே நேரத்தில் எம்பி ஆகும் தாத்தா, பேரன்

ஒரே நேரத்தில் எம்பி ஆகும் தாத்தா, பேரன்

2 mins read
3efa5528-723a-4015-8775-c55229640b1b
பார்த் பவார், சரத் பவார். - படங்கள்: இந்தியா டுடே

மும்பை: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தாத்தா, பேரன் இருவரும் ஒரே சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

அடுத்த சில நாள்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பவார் குடும்பத்தைச் சேர்ந்த சரத் பவார், பார்த் பவார் ஆகிய இருவரும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உறவினர்களாக இருந்த போதிலும் இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளையும் வெவ்வேறு தலைமுறைகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

85 வயதான சரத் பவார் (85), நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வர் மறைந்த அஜித் பவாரின் மகனும், சரத் பவாரின் பேரனுமான பார்த் பவார், எம்.பி.யாக தனது முதல் பதவிக் காலத்தைத் தொடங்க உள்ளார்.

மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலின் முடிவில் பவார் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். சரத் பவார், பார்த் பவார் ஆகிய இருவரும் மாநிலங்களவையிலும், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மக்களவையிலும் உறுப்பினர்களாக இருப்பர்.

அஜித் பவார் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் மகாராஷ்டிர துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

அவர் இதுவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. துணை முதல்வராகப் பொறுப்பேற்ற அவர், ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும்.

இதனிடையே, சரத் பவாரின் பேரன் ரோகித் பவாரும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள், இரண்டு எம்எல்ஏக்கள் இருப்பது இந்திய அரசியலில் பவார் குடும்பத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
மகாராஷ்டிராஎம்.பி.நாடாளுமன்ற உறுப்பினர்சரத் பவார்