புதுடெல்லி: வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக ரூ.14 கோடி வரையிலான ஆய்வு உதவித் தொகை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களது பங்களிப்பால் அந்நிய நாடுகள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தச் சூழலில் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்புவதற்காக ‘பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026’ (பிஎம்ஆர்சி) என்ற முயற்சியை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு, கணினி சில்லு, எரிசக்தி, இணையப் பாதுகாப்பு, மருத்துவம், உயிர்தொழில்நுட்பம், அரியவகை கனிமங்கள், விண்வெளி-பாதுகாப்பு, தகவல் தொடர்பு, உற்பத்தி, வேளாண்மை, மீன்வளம், அணுசக்தி ஆகிய 13 துறைகள் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க வெளிநாடுவாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பிஎம்ஆர்சி திட்டத்தில் இளம் ஆய்வாளருக்கு ரூ.4 கோடி வரை உதவித் தொகை வழங்கப்படும்.
மூத்த ஆய்வாளர்களுக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.14 கோடி வரை உதவித் தொகை அளிக்கப்படும்.
டெல்லி, மும்பை, சென்னை, கான்பூர், ஹைதராபாத், தன்பாத்தில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்தில் வெளிநாடுவாழ் இந்திய விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
பிஎம்ஆர்சி திட்டத்தில் இணைய https://pmrc.education.gov.in/ என்ற இணையம் வாயிலாக வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

