தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாலி கட்டியதும் மணமகனுக்குச் சாட்டையடி

2 mins read
78866da7-7009-4439-bd66-c5df3b89c590
மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டியவுடன், மணமகனின் குடும்ப உறுப்பினர்கள் அவரை இந்தச் சடங்கின்படி கருப்புச் சாட்டையால் அடிக்கிறார்கள். - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக மணமகனை, கருப்புச் சாட்டையால் அடிக்கும் ஒரு விநோதச் சடங்கு நடைமுறையில் உள்ளது.

அங்கு வசிக்கும் புச்சுபல்லே என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சடங்கைப் பின்பற்றுகின்றனர்.

அங்குள்ள கடப்பா மாவட்டத்தில் மணமகனை மூன்று முறை கருப்புச் சாட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமையானதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

திருமணங்களில் மணமகனை மூன்று முறை கருப்புச் சாட்டையால் அடிப்பது ஒரு விநோத சடங்காக பின்பற்றப்படுகிறது.

கங்கம்மா என்ற தெய்வம், கனவில் தோன்றி இவ்வாறு உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது.

மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டியவுடன், மணமகனின் குடும்ப உறுப்பினர்கள் அவரை இந்தச் சடங்கின்படி கருப்புச் சாட்டையால் அடிக்கிறார்கள்.

புச்சுபல்லே பிரிவைச் சேர்ந்தவர்கள் கங்கம்மா கோவிலில் இருந்த ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் ஐந்து கருப்புச் சாட்டைகளைக் கண்டனர் என்றும் இதனால் தவறு செய்துவிட்டதாகக் கருதி பயந்துபோன அம்மக்கள், கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் மன்னிப்பு கோரியதாகவும் பெரியவர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதன் பின்னர், பக்தர்களின் கனவில் தோன்றிய கங்கம்மா தெய்வம், திருமணத்தின்போது மணமகனை கருப்புச் சாட்டையால் மூன்று முறை அடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது, அப்போது முதல் இந்த விநோதச் சடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் பெரியவர்களின் விளக்கமாக உள்ளது.

ஆந்திராவில் உள்ள பத்ரம்பள்ளி, தொண்டூர், இனங்களூர், லோமட புச்சி பல்லே போடிவாரி பல்லே, மல்லேலா, அகதூர், சந்த கோவூர் போன்ற கிராமங்களில், புச்சுபல்லே பிரிவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த விநோதமான திருமணச் சடங்கு இன்றும் தொடர்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்