கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொடூரக் கொலையைக் கண்டித்து கடந்த 42 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த இளம் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு சனிக்கிழமை காலை முதல் கட்டம் கட்டமாக வேலைக்குத் திரும்பினர்.
கோல்கத்தா ஆா்.ஜி. கா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 9ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்காள மாநிலத்தில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் ஆகஸ்ட் 9 முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் நிா்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, இளம் மருத்துவா்களில் ஒரு பிரிவினர் அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை வார்டுகளுக்கு பகுதி பகுதியாக பணிக்குத் திரும்பவும் மற்றொரு பிரிவினர் போராட்டத்தைத் தொடரவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதே நேரம், புறநோயாளிகள் பிரிவு பணியை தொடா்ந்து புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், “42 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவா்களில் ஒரு பகுதியினர் பேராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமை காலை பணிக்குத் திரும்பினர்,” என்று போராட்ட மருத்துவர்களில் ஒருவரான அனிகேத் மஹதோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இளம் மருத்துவர்கள் சிலர் மாநிலத்தின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலும் ‘மருத்துவ முகாம்கள்’ நடத்தி பொது சுகாதாரத்தில் தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“உயிரிழந்த மருத்துவருக்கு நீதி வேண்டும்; மாநில சுகாதாரத்துறைச் செயலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஏழு நாள் கெடு விதித்து உள்ளோம்.
“எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் முழுமையான பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை,” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.