காற்சட்டைகளே காய்கறித் தொட்டிகள்; வியக்க வைக்கும் மாணவ விவசாயி

2 mins read
250456db-fc51-4f02-a75d-a93f1af674a4
தமது பழைய காற்சட்டைகளைக் கொண்ட ஒரு காய்கறிப் பண்ணையை உருவாக்கியுள்ள மாணவர் அபினவ். - படம்: மனோரமா நியூஸ்

கொச்சி: பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவரின் புதுமையான காய்கறித் தோட்ட முயற்சி, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.

வடக்கு பரவூரைச் சேர்ந்த அபினவ் என்ற அம்மாணவர், நெகிழிப் பைகளுக்குப் பதிலாக தன்னுடைய பழைய ஜீன்ஸ் காற்சட்டைகளையே காய்கறிச் செடிகளுக்கான தொட்டிகளாகப் பயன்படுத்தி வருகிறார்.

விதைகளைக் கோழிகள் கொத்தித் தின்றுவிடுவதைக் கண்டதால் அபினவிற்கு இப்புதுமையான எண்ணம் தோன்றியது.

வேளாண்மைமீது பெருநாட்டம் கொண்டுள்ள அபினவ், அதற்கு மாற்றாகப் பசுமை சார்ந்த, அதே நேரத்தில் செலவு குறைவான தீர்வைக் கண்டறிய விரும்பினார். பலநாள் யோசனைக்குப் பிறகு, காய்கறிச் செடிகளை வளர்க்க தமது பழைய ஜீன்ஸ் காற்சட்டைகளைப் பயன்படுத்திப் பார்க்க அவர் முடிவுசெய்தார்.

“செடி வளர்ப்பு நெகிழிப் பைகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்குவதில்லை. அதனால், அதற்குப் பதிலாக ஜீன்ஸ் காற்சட்டையைப் பயன்படுத்த முடிவுசெய்தேன். செடி வளர வளர ஜீன்சும் சிதைந்து, பூமிக்கு எக்கேடும் தராமல் எளிதாக மக்கிப் போகிறது,” என்று விளக்கினார் இந்த மாணவ விவசாயி.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தமது சிறுபண்ணையில் நேரத்தைச் செலவிடுகிறார் அபினவ்.

தொடக்கத்தில், விவசாயத்தின்மீதான அபினவ்வின் ஆர்வத்தை அவரின் குடும்பத்தினர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆயினும், கொவிட்-19 பரவல் காலத்தில் காய்கறிச் செடிகள், வாழை மரங்கள் என வீட்டு முற்றத்தையே சிறுதோட்டமாக மாற்றியமைத்தார் அபினவ். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினரும் அவரை ஊக்குவிக்கத் தொடங்கினர்.

அபினவ்வின் ஆர்வத்தைக் கண்டு, அண்மையில் அவருடைய அண்டை வீட்டுக்காரரும் தமது நிலத்தை அவருக்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளார்.

உள்ளூர் ஊராட்சி மன்றத்தினரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

தம் வயதுப் பிள்ளைகள் கைப்பேசி விளையாட்டுகளில் பொழுதைக் கழிக்க, தமது புதுமையான விவசாய பாணி மூலம் பலரையும் கவர்ந்து வருகிறார் அபினவ்.

குறிப்புச் சொற்கள்