புதுடெல்லி: இந்தியாவில் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹2,11,205 கோடியைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது 2025 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ₹1,83,065 கோடியுடன் ஒப்புநோக்க 15.4 விழுக்காடு வளர்ச்சியாகும்.
நடப்பு நிதியாண்டில் மாதாந்தர ஜிஎஸ்டி வசூல் ₹2 லட்சம் கோடியைத் தாண்டுவது இது இரண்டாவது முறையாகும். மேலும், 2017 ஜூலை 1 அன்று ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது முதல் பதிவான மூன்றாவது மிக உயர்ந்த மாதாந்தர வசூல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பொருளியலின் உறுதியான நிலைத்தன்மை, உள்நாட்டு நுகர்வோர் பயன்பாட்டில் நிகழ்ந்த சீரான ஏற்றம், திறமையான வரி இணக்க நடைமுறைகள் இந்த உயர்வுக்குக் காரணம் என மத்திய நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.
மேலும், உள்நாட்டு வர்த்தகச் சேவைகள் மூலம் கிடைத்த வரி வருவாய் 10.1 விழுக்காடு அதிகரித்து ₹1,44,695 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ₹1,31,439 கோடியாக இருந்தது. அதேவேளையில், இறக்குமதி தொடர்பிலான ஜிஎஸ்டி வசூல் 28.8 விழுக்காட்டளவு கணிசமாக உயர்ந்து ₹66,511 கோடியை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்துரைத்த பொருளியல் வல்லுநர்கள், உலகளாவிய பொருளியல் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் தொழில் உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் சீராக இயங்கி வருவதையே இந்த ஜிஎஸ்டி உயர்வு சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான இந்த வரி வசூல் உயர்வு, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நாட்டின் பொருளியல் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

