புதுடெல்லி: இந்தியாவில் பொருள்-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.23 லட்சம் கோடியாகப் பதிவானது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத வசூல் 8.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இறக்குமதிகள் மீதான வரிகள் அதிகரித்ததே ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க முக்கியமான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்நாட்டின் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு தொடர்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் பலனாக, கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 88 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. தற்போது மார்ச் மாத புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், கடந்த 2025-26 முழு நிதியாண்டில் இந்த முதலீடு 90 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

