டெல்லியில் செப்டம்பர் 12ஆம் தேதி ஜிஎஸ்டி மன்றக் கூட்டம்

டெல்லியில் செப்டம்பர் 12ஆம் தேதி ஜிஎஸ்டி மன்றக் கூட்டம்

2 mins read
ஓராண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது
07f9e06d-a363-4e07-b0fa-2abc982ea6ea
ஜிஎஸ்டி மன்றத்தின் 57வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தினமணி இணையத்தளம்
Google News Preferred Icon

புதுடெல்லி: பொருள், சேவை வரி தொடர்பான ‘ஜிஎஸ்டி’ மன்றக் கூட்டம், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ‘ஜிஎஸ்டி’ பதிவை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்படும்.

இதுகுறித்து ‘ஜிஎஸ்டி’ மன்றச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜிஎஸ்டி மன்றத்தின் 57வது கூட்டம், டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகிப்பார். கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனா்,” எனக் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டம், கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நடைபெறுகிறது. கடந்த ‘ஜிஎஸ்டி’ மன்றக் கூட்டம் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3, 4ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், வரிக் கட்டமைப்பு விகிதங்களை மாற்றியமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த முடிவு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. இதன்படி நான்கு கட்டமைப்புகளாக இருந்த வரி விகிதம், ஐந்து மற்றும் 18 விழுக்காடு என இரண்டு கட்டமைப்புகளாக மாற்றப்பட்டது. ஆடம்பர, மதுபானப் பொருள்கள் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக 40 விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டது.

மேலும், அக்கூட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ‘ஜிஎஸ்டி’ பதிவை எளிமையாக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு 2025 நவம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் மாதம் ரூ.2.50 லட்சத்துக்குமேல் வரி வரம்பை மாற்றும் திறன்கொண்ட பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ‘ஜிஎஸ்டி’ பதிவை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தானியங்கி வரி விதிப்பு, ‘ஜிஎஸ்டி’ பதிவு ரத்து உள்ளிட்டவையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஏறத்தாழ 1.68 கோடி வர்த்தக நிறுவனங்கள், ‘ஜிஎஸ்டி’யின்கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளன. தற்போது மத்திய ‘ஜிஎஸ்டி’, மாநில ‘ஜிஎஸ்டி’ ஆகியவற்றில் பெரிய தொழில் நிறுவனங்கள் ‘ஜிஎஸ்டி’ பதிவு மேற்கொள்ள ஒரே மாதிரியான நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்