புதுடெல்லி: தீபாவளிப் பரிசாக இந்திய அரசாங்கம் பொருள், சேவை வரியைக் (ஜிஎஸ்டி) குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் அறிவித்தபடி, செப்டம்பர் 22ஆம் தேதிமுதல் வரிக்குறைப்பு நடப்புக்கு வருகிறது.
ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்ள நடத்தப்பட்ட கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற அந்த ஜிஎஸ்டி ஆலோசனை மன்றக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்த மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் திருமதி நிர்மலா ஆலோசனை நடத்தினார்.
இறுதியில், தற்போது நடப்பில் உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டியை இரண்டு அடுக்குகளாகக் குறைக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
அந்த வகையில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, இனிமேல் 5%, 18% என இரு அடுக்குகள் மட்டுமே இருக்கும் என திருமதி நிர்மலா தெரிவித்தார்.
அதேவேளை, சிறப்புப் பொருள், சேவை வரியாக (ஸ்பெஷல் ஜிஎஸ்டி) ஆடம்பரப் பொருள்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என அவர் கூறினார்.
அவரது அறிவிப்பில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: தனிநபர் ஆயுள் காப்புறுதி, மருத்துவக் காப்புறுதி, உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கும் சொகுசு கார்களுக்கும் 40% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், பான் மசாலா, குட்கா, இனிப்பு கலந்த பொருட்களுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் தலைமுடி எண்ணெய், ஷாம்பு, பற்பசை, சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி 5 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.
குளிரூட்டி, தொலைக்காட்சி, கார் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். விவசாய உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி 5%.
கல்வி சார்ந்த எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமதி நிர்மலா, “ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம். இதற்கும் டிரம்ப்பின் 50% வரிவிதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்றார்.
மேலும், ஜிஎஸ்டி குறைக்கப்படுவதால் ஏற்படும் பலன்களை மக்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பியதால் தீபாவளிப் பரிசு செப்டம்பர் 22ஆம் தேதி முதலே நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 2017 ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் கண்டது. கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜிஎஸ்டி என்ற ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டன.