புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய நிதியமைச்சு திட்டமிட்டு உள்ளது. இதன்படி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், ஆட்டோமொபைல்ஸ், கைப்பேசிச் சாதனங்கள், கணினி உள்ளிட்ட பொருள்களின் விலை கணிசமாகக் குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஆடம்பரப் பொருள்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 15ஆம் தேதி, சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்குகள் உள்ளன. ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை நடப்புக்கு வந்ததும் 5%, 18% என்ற இரு வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
இப்போதுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் 90 விழுக்காட்டுப் பொருள்கள் 28 விழுக்காடு வரி வரம்பின் கீழ் உள்ளன. இந்தப் பொருள்கள் அனைத்தும் 18 விழுக்காடு வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்படும். இதன்படி கார், மோட்டார் சைக்கிள், சிமென்ட், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கைப்பேசி, கணினி உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் 18 விழுக்காடு வரம்பின் கீழ் வரும் எனத் தெரிகிறது.
இப்போது 28 விழுக்காடு வரி செலுத்தப்படும் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் யாவும் 18 விழுக்காடு வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் கட்டுமானச் செலவு குறையும். வீடுகளின் விலையும் குறையும். இதனால் வீட்டு வசதித் துறை அபார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலைப் பொருட்கள், மதுபானங்கள், இணைய விளையாட்டு மற்றும் ஆடம்பரப் பொருள்களுக்கு மட்டும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும். சொகுசு கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இந்த வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்படும்.
ஆடம்பரப் பொருள்கள் மற்றும் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் போதைப் பொருள்கள் அனைத்துக்கும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினார். மேலும் இந்தத் திட்டங்களால் குடிமக்கள் இரட்டிப்புப் பயன்களைப் பெறுவர் என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டியை வெளிப்படையான, எளிய வரி முறையாக ஆக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்திருப்பதால் பல்வேறு பொருளாதாரச் சவால்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டுச் சந்தை பெரும் வளர்ச்சி காணும். அதனால் நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும் என்று கூறப்படுகிறது.