சூரத்: இரண்டு பேருந்துகளுக்கு இடையில் நான்கு மோட்டார்சைக்கிள்கள் சிக்கிக்கொண்ட விபத்தில் 48 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் அறுவர் காயமடைந்தனர்.
இவ்விபத்து இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரில் சனிக்கிழமை (டிசம்பர் 23) மாலை நிகழ்ந்தது.
சாலையில் அவ்விரு பேருந்துகளுக்கு இடையே நான்கு மோட்டார்சைக்கிள்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், முன்னால் சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.
இதனைச் சற்றும் எதிர்பாராததால், பின்னால் வந்த பேருந்து அந்நான்கு மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியதாக காவல்துறைத் துணை ஆணையர் தெரிவித்தார்.
இரண்டாவது பேருந்துக்குப் பின்னால் வந்த ஆட்டோரிக்ஷா, அப்பேருந்தின்மீது மோதி சேதமடைந்தது.
அந்த நான்கு மோட்டார்சைக்கிள்களிலும் சேர்த்து எட்டுப் பேர் பயணம் செய்தனர்.
“காயமடைந்தவர்கள் அருகிலிருந்த இரண்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இரண்டாவது பேருந்தின் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையிலிருந்து அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது,” என்று அந்த உயரதிகாரி சொன்னார்.

