காந்தி நகர்: குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 21 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபலமான வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அந்தக் கள்ளச் சாராயத்தைப் பாதிக்கப்பட்டவர்கள் குடித்துள்ளனர்.
“கரகடி கிராமத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த, ரசாயனம் கலந்த மதுவை அருந்தி உயிரிழப்புகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 21 பேரைக் குற்றவாளிகளாகக் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது,” என்று அதிகாரிகள் கூறினர்.
காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் பாண்டே கூறுகையில், “சில நாள்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதுபான வகையின் போலி போத்தல்களிலிருந்து ஒரு சிலர் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஒரே மாதிரியான பாதிப்புகள் இருந்தது தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் போத்தல்கள் மத்தியப் பிரதேசத்திலிருந்து விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
போலி போத்தல்கள் எங்கிருந்து வந்தன, எப்படித் தயாரிக்கப்பட்டன, பாவ்நகருக்கு அவற்றை அனுப்பியது யார் என்பது குறித்த கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.


