குஜராத்தில் ரூ.212 கோடியில் புதிய பாலம்

1 mins read
2dcb77aa-3db1-4991-94b7-5de57ac8a661
மஹிசாகா் ஆற்றின் குறுக்கே ரூ.212 கோடியில் புதிய பாலம் கட்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அனுமதி. - படம்: இந்திய ஊடகம்

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்து 20 பேர் உயிரிழந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) வதோதரா - ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முஜ்புர் அருகே புதிய இருவழி உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ரூ.212 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய பாலத்தை 18 மாதங்களில் கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒப்பந்தப்புள்ளி செயல்முறையும் தொடங்கப்பட உள்ளது. வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாகப் புதிய பாலம் கட்டப்படவுள்ளது.

மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி கடந்த 9ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது.

பாலம் இடிந்ததில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.

முதற்கட்ட விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட திரு பூபேந்திர படேல், 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்