ஜுனாகத்: குஜராத் மாநிலத்தின் விசாவதர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது.
பாஜக வேட்பாளர் கிரித் பட்டேல் 17,554 வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கோபால் இட்டாலியாவிடம் தோற்றுப்போனார்.
விசாவதர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் பூபத் பாயானி பதவி விலகியதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இம்மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 16 பேர் அங்குக் களத்தில் இருந்தனர்.
பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (ஜூன் 23) எண்ணப்பட்ட நிலையில், கோபாலுக்கு 75,942 வாக்குகளும் கிரித்திற்கு 58,388 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சியின் நிதின் ரன்பரியா 5,501 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
விசாவதரில் தோற்றபோதும் கடீ தொகுதியில் பாஜக வாகை சூடியது. அங்கு பாஜக வேட்பாளர் ராஜேந்திர சவ்டா 99,742 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சவ்டாவிற்கு 60,290 வாக்குகள் கிடைத்தன.
இதனிடையே, கேரள மாநிலம், நிலம்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்யதன் சௌகத் 11,077 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா மேற்குத் தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக்கொண்டது. அக்கட்சி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷணை 10,637 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அலிஃபா அகமது வெற்றிபெற்றார்.