அகமதாபாத்: தாம் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்தார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
சஞ்சய் போல்ரா எனும் அவர், கடந்த 2006ஆம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதன்பிறகு அவர் தமது வாழ்வில் ஏற்றங்களையே சந்தித்தார். அந்தக் கார் வந்தபின்னரே அதெல்லாம் நடந்தது எனக் கருதிய அவர், அதனைத் தம் குடும்பத்தில் ஒருவரைப்போல் கருதினார்.
இந்நிலையில், அந்தக் காரை வாங்கி 18 ஆண்டுகளாகிவிட்டதால் அதனை வேறு யாருக்கும் தராமல், அடக்கம் செய்து சமாதி எழுப்ப சஞ்சய் முடிவுசெய்தார்.
இதற்காக, 2,000 அழைப்பிதழ்களையும் அச்சிட்டு, அவர் தமது கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். வியாழக்கிழமை (நவம்பர் 7) நடந்த அந்நிகழ்வில் தடபுடல் விருந்தும் பரிமாறப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஞ்சயின் கார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது. இந்த விந்தையான நிகழ்வு உள்ளூர்வாசிகளிடமும் வரவேற்பு பெற்றது.