வாகனங்களில் சாதி அடையாளங்களைக் காட்சிப்படுத்த குஜராத் அரசு தடை

வாகனங்களில் சாதி அடையாளங்களைக் காட்சிப்படுத்த குஜராத் அரசு தடை

கோப்புப்படம்: ஐஏஎன்எஸ்

23 Nov 2026 - 12:10 pm

1 mins read

காந்திநகர்: தனியார் வாகனங்களில் சாதி சார்ந்த சொற்கள், சின்னங்கள், அடையாளம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த குஜராத் அரசு தடை விதித்துள்ளது.

அந்த மாநிலத்தில் மோட்டார் வாகன விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தத்தின் அடிப்படையில் அந்தத் தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றில் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியின்றி சாதி அடையாளங்களையோ விளம்பரங்களையோ காட்சிப்படுத்தக் கூடாது என குஜராத் துறைமுக, போக்குவரத்துத் துறை நவம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

1989ஆம் ஆண்டின் குஜராத் மோட்டார் வாகன விதிகளில் புதிய துணை விதி சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் புதிய விதியின் தொடர்பில் ஜூன் 11ஆம் தேதி வெளியான வரைவு அறிக்கைக்கு 30 நாள்களுக்குள் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படாததால் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் சாலைகளில் ‘படிதார்’, ‘சத்திரியர்’ போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட வாகனங்கள் முன்பு வலம் வந்தன. 2015ஆம் ஆண்டு ராஜ்கோட் காவல்துறை அத்தகைய எழுத்துகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் பகுதிகளில் 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 2,300க்கும் மேற்பட்ட அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

தற்போதைய குஜராத் விதித் திருத்தம், பதிவு எண் பலகைகளைத் தாண்டி வாகனத்தின் பிற பகுதிகளில் இடம்பெறும் சாதி அடையாளங்களுக்கும் தடையை விரிவுபடுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்