அகமதாபாத்: குஜராத் மாநிலம் முழுவதும் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே இந்தக் கதியா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
குஜராத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலைகுறித்து, அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு, மாநில பாஜக அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 32 மாவட்டங்களில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 8,586 வகுப்பறைகளும் மேல்நிலைப் பள்ளிகளில் 856 வகுப்பறைகளும் அடங்கும்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 1,140 தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 75 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடபட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை.
“ஒருபுறம் ஆயிரக்கணக்கான வகுப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மறுபுறம் மாணவர் பற்றாக்குறையால் பள்ளிகள் மூடப்படுகின்றன.
“இந்த முரண்பாடு, திட்டமிடல் திறமையின்மையை மட்டுமல்ல, கிராமப்புறப் பள்ளிக் கல்வி வலையமைப்புகளைச் சிதைத்து, மாறிவரும் மக்கள்தொகை, இடம்பெயர்தல் போக்குகளையும் வெளிவாகச் காட்டுகின்றன,” என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது 2,674 அரசுப் பள்ளிகள் சுழற்சி முறையில் (Shift) இயங்கி வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

