நாடுகடத்தப்பட்ட இந்தியர்; கடப்பிதழில் பக்கங்கள் கிழிப்பு

நாடுகடத்தப்பட்ட இந்தியர்; கடப்பிதழில் பக்கங்கள் கிழிப்பு

படம்:எஸ்பிஎச்

06 Feb 2024 - 6:11 pm

1 mins read

அகமதாபாத்: தனது கள்ளப் பயணத்தைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகக் கடப்பிதழில் சில பக்கங்களைக் கிழித்த இந்தியர் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டார்.

குஜராத் மாநிலம், மகேசானா நகரைச் சேர்ந்தவர் நிர்மல் பட்டேல், 25. கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், கடந்த ஜனவரி 20ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

டெல்லி விமான நிலையக் காவல்துறையினர் உடனே நிர்மலைப் பிடித்து விசாரித்தனர். அவரது கடப்பிதழை ஆராய்ந்தபோது அதில் சில பக்கங்கள் விடுபட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, விமான நிலையக் காவல்துறை நிர்மல்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

“நிர்மலின் கடப்பிதழைச் சோதித்தபின் அதில் ஐந்து முதல் எட்டுப் பக்கங்களைக் கணவில்லை. அவரிடம் கனடிய விசாவும் இல்லை,” என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழும் கடப்பிதழ் சட்டத்தின்கீழும் நிர்மல்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

நிர்மலைப் போன்ற கள்ளக் குடியேறிகள், தங்களுக்கு எதிரான சான்றுகளை அழிக்கும் நோக்கில், அவர் செய்தது போலவே கடப்பிதழ் பக்கங்களையும் விசாவையும் கிழித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்