சம்பளம் கேட்ட ஊழியரை அடித்து உதைத்து, வாயில் செருப்பைத் திணித்த முதலாளி

2 mins read
317601c2-aaf1-474d-b20f-951231ba9b83
அடி உதையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீலேஷும் அவரைத் தாக்கிய ராணிபாவும். - படங்கள்: இந்திய ஊடகம், இன்ஸ்டகிராம்

அகமதாபாத்: தன் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர் சம்பளம் கேட்டதை அடுத்து, அவரை அடித்து உதைத்து, வாய்க்குள் செருப்பைத் திணித்த பெண் முதலாளி உள்ளிட்ட குறைந்தது எழுவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், மோர்பி நகரில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது.

ராணிபா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் விபுத்தி பட்டேல் என்ற ராணிபா.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் மாதம் ரூ.12,000 சம்பளம் தருவதாகக் கூறி, நீலேஷ் தல்சானியா, 21, என்ற ஆடவரை அவர் தமது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினார்.

ஆயினும், அக்டோபர் 18ஆம் தேதி ராணிபா, நீலேஷைத் திடீரென வேலைநீக்கம் செய்தார். அதனையடுத்து, தான் வேலை செய்த 16 நாள்களுக்குச் சம்பளம் தரும்படி நீலேஷ் அவரிடம் கேட்டார்.

ஆனால், அதற்குத் தெளிவாக பதிலேதும் சொல்லாத ராணிபா, அதன்பின் நீலேஷின் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்தார்.

அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையில் தன் சகோதரர் மெகுல், அண்டை வீட்டுக்காரர் பவேஷுடன் ராணிபாவின் அலுவலகத்திற்குச் சென்றார் நீலேஷ். அப்போது, தன் கூட்டாளிகளுடன் அங்கு விரைந்த ராணிபாவின் சகோதரர் ஓம் பட்டேல், அவர்கள் மூவரையும் அடித்து உதைத்தார்.

நீலேஷை அறைந்த ராணிபா, அவரைத் தரதரவென மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றார்.

அங்கு, ஓம் பட்டேலும் மேலும் சிலரும் சேர்ந்து நீலேஷை அடித்து உதைத்தனர். அவர்கள் இடைவாராலும் நீலேஷை விளாசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், நீலேஷின் வாய்க்குள் தமது செருப்பைத் திணித்து, சம்பளம் கேட்டதற்காக மன்னிப்பு கேட்கும்படி ராணிபா வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இனியொருமுறை தமது அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தன்னைப் பார்த்தால் கொன்றுவிடுவதாகவும் ராணிபா மிரட்டியதாகக் காவல்துறையிடம் நீலேஷ் தெரிவித்தார்.

அத்துடன், ராணிபாவை மிரட்டி பணம் பறிக்க தான் வந்ததாக நீலேஷைச் சொல்லச் சொல்லி, அவர்கள் ஒரு காணொளியையும் பதிவுசெய்தனர்.

வீடு திரும்பியபின் நீலேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

“நீலேஷ் தன் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவர்மீதும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது,” என்று காவல்துறை குறிப்பிட்டது.

விசாரணை தொடர்ந்தாலும், இன்னும் அவர்களில் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்