சென்னை: மாநிலங்களை ஒப்பிட நினைத்தால் அவை சமூக நிலையில் அடைந்துள்ள சாதனைகளை வைத்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
சென்னையில் தனியார் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், குஜராத் வளமான மாநிலமாக அறியப்பட்டாலும் சமூக அடிப்படையில் அந்த மாநிலம் பின்தங்கியுள்ளது என்றார்.
மேலும், மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
குஜராத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் மிகவும் அதிகம் எனக் குறிப்பிட்டவர், கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 240,000 இடைநிற்றல் நடந்துள்ளது என்றார்.
தமிழகத்தில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 15 ஆயிரமாக இருக்கும் என்றும் கேரளாவில் 7,500ஆகப் பதிவாகி உள்ளது என்றும் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
இந்த வித்தியாசத்திற்கும் மக்கள்தொகைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து துறைகளில் மைல்கல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை இடதுசாரிகளின் அழுத்தத்தால் நடந்துள்ளன.
“கேரளத்தில் உள்ள பள்ளிகள் உலகத் தரத்திலான பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை கொண்டுள்ளன,” என்றும் ஜான் பிரிட்டாஸ் பெருமிதத்துடன் கூறினார்.

