‘தங்க மண்’ எனக் கூறி தமிழகப் பொற்கொல்லர்களை ஏமாற்றிய குஜராத்தியர்கள்

2 mins read
58c38a40-e636-43b3-a658-da53383d1631
சூரத்தைச் சேர்ந்த அந்நால்வரும் ரொக்கமாக ரூ.5 மில்லியனையும் (S$78,450) காசோலையாக ரூ.1.8 மில்லியனையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

கொச்சி: தங்கத் துகள்கள் அடங்கிய மண்ணை விற்பதாகக் கூறி, தமிழகப் பொற்கொல்லர்களை ஏமாற்றியதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நால்வரை கேரளக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) கைதுசெய்தது.

சூரத்தைச் சேர்ந்த அந்நால்வரும் ரொக்கமாக ரூ.5 மில்லியனையும் (S$78,450) காசோலையாக ரூ.1.8 மில்லியனையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

அவர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாமக்கல்லைச் சேர்ந்த பொற்கொல்லர்கள், பின்னர் அதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

தங்க நகை செய்யும் தொழிற்சாலையிலிருந்து தங்கத் துகள் அடங்கிய மண்ணைச் சேகரித்து வைத்துள்ளதாக அந்த குஜராத்தியர்கள் தமிழகப் பொற்கொல்லர்களிடம் கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் கிட்டத்தட்ட 50 சாக்குப்பைகளில் அம்மண்ணை வைத்திருந்தனர். தங்களை நம்ப வேண்டும் என்பதற்காக பைகளில் இருந்து ஐந்து கிலோ மண்ணை எடுத்துச் சோதிக்கும்படி அவர்கள் கூறினர்.

அதற்காக ஒரு தனி அறையையும் ஒரு மேசையையும் அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

மேசைமீது எடைக்கருவியை வைத்து, அதில் அந்த மண்ணை அவர்கள் கொட்டினர். ஏற்கெனவே, எடைக்கருவியிலும் மேசையிலும் போட்டிருந்த துளையின் வழியாக, மேசையின் அடியிலிருந்து ஒருவர் ஊசி மூலம் தங்கக் கரைசலை அதில் செலுத்தினார்.

அதனையடுத்து, அம்மண்ணில் தங்கம் அதிக அளவில் இருப்பதாகத் தமிழகப் பொற்கொல்லர்களும் நம்பிவிட்டதாகக் காவல்துறை விளக்கியது.

அதனைத் தொடர்ந்து, ஐந்து டன் மண்ணைக் கொள்முதல் செய்வதற்காக ரொக்கமாக ரூ.50 லட்சத்தையும் இரண்டு காசோலைகளையும் அவர்கள் வழங்கினர்.

ஆயினும், முதலில் பெற்ற மாதிரியைச் சோதித்துப் பார்த்தபோது அதில் மிகுதியான அளவில் தங்கம் இருந்ததால் தமிழகப் பொற்கொல்லர்கள் சந்தேகம் அடைந்தனர். அதனால், அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்