இருவரை மணந்த ஆடவருக்கு நெருக்கடி

2 mins read
71589819-31f4-47d1-bc01-2929686f6889
-

திருமண வாழ்க்கையில் ஒரு துணைவியாரை வைத்துக்கொண்டு சமாளிப்பதே பலருக்கும் சவாலான ஒரு விஷயம். ஆனால், இரு மனைவிகளையும் அவர்தம் பிள்ளைகளையும் சமாளிக்க, ஆடவர் ஒருவர் தனி ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

இந்தியாவின் ஹரியானா மாநிலம், குருகிராம் நகரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், 2018ல் சீமா எனும் 28 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

ஈராண்டுகளுக்கு ஒன்றாக வசித்த அத்தம்பதியர், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொண்டனர்.

2020ல் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது, தம் மனைவி, மகனை மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட அந்த ஆடவர் முடிவெடுத்தார். முடக்கநிலை தொடர்ந்த நிலையில், சீமா தம் பெற்றோர் வீட்டிலேயே இருந்தார். அவருடைய கணவரோ தொடர்ந்து தனியாக வசித்து வந்தார்.

அப்போது நிறுவனத்தில் பணிபுரிந்த சக ஊழியர் ஒருவருடன் சீமாவின் கணவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவ்விருவரும் மேலும் நெருக்கமாக, ஒன்றாக குடித்தனம் நடத்தவும் தொடங்கிவிட்டனர். பின்னர் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவும் அந்தப் பொறியாளர் முடிவெடுத்தார். விரைவில் பெண் குழந்தைக்கு அவர்கள் பெற்றோராகிவிட்டனர்.

தம் கணவர் மறுமணம் செய்துகொண்டது பற்றி சீமாவுக்கு தெரியவந்ததும் அவர் ஆத்திரம் அடைந்தார். கணவரைச் சென்று பார்த்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியருக்குத் திரும்பிய சீமா, ஜீவனாம்சம் கோரி கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தார்.

ஆலோசனையாளர் ஹரிஷ் தேவனிடம் சென்ற அத்தம்பதியர், இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து விவாதித்தனர். விரைவில் சமரசம் காணுமாறு அத்தம்பதியரிடம் ஹரிஷ் கூறினார்.

அதன்படி, இரு மனைவிகள், அவர்தம் பிள்ளைகளுடன் கணவர் தமது நேரத்தைச் சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும். கணவருடன் இருக்க மனைவிகள் ஒவ்வொருவருக்கும் மூன்று நாள்கள் வழங்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளை கணவர் தமக்காக ஒதுக்கிக்கொள்வார். அவ்விரு பென்களுக்கும் குருகிராமில் இரு வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.