எச்1என்1 தொற்று அதிகரிப்பு; சுய மருத்துவம் செய்ய வேண்டாமென எச்சரிக்கை

எச்1என்1 தொற்று அதிகரிப்பு; சுய மருத்துவம் செய்ய வேண்டாமென எச்சரிக்கை

2 mins read
550e6f3c-e3e9-4ccc-bcfa-15cb8d7bf429
இந்தியாவில் பருவமழைக் காலத்தில் ஏற்படும் எச்1என்1 (பன்றிக்) காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளன. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் பருவமழைக் காலத்தில் பரவக்கூடிய ‘எச்1என்1’ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ‘எச்1என்1’ பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 1,770 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் சுய மருத்துவத்தைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் வைரசில் புதிய மரபணு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என அது கூறியது.

அதேவேளையில் மருத்துவர் ஆலோசனையின்றி தாங்களாகவே ‘ஆண்ட்டிபயாடிக்’ அல்லது ‘ஆண்ட்டி வைரல்’ மருந்துகளை உட்கொண்டால், அது உடலில் மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்கிப் பாதிப்பை தீவிரமாக்கும் என்று கழகம் குறிப்பிட்டது.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, விரல்கள் நீல நிறமாக மாறுவது போன்றவை அதன் தீவிர அறிகுறிகளாகும்.

பாதிப்பு பரவாமல் தடுக்கப் பேருந்து, ரயில், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.

இருமல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி பேணுவதுடன், சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை 20 வினாடிகள் சுத்தமாகக் கழுவுவதன் மூலம் தொற்றை 80 விழுக்காடு தவிர்க்க முடியும் எனச் சுகாதாரத்துறை தெரிவிப்பதாக ஐஎம்ஏ தலைவர் அனில்குமார் நாயக் தலைமையிலான குழு குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகாய்ச்சல்தொற்றுபரவல்அதிகரிப்புதமிழ்நாடு