மும்பை: மகராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக ஊடகக் கணக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சிறிது நேரம் ஊடுருவப்பட்டிருந்தது.
ஊடுருவிகள் அவரின் எக்ஸ் கணக்கில் பாகிஸ்தான், துருக்கிய தேசியக் கொடிகளைப் பதிவேற்றம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட சின்னங்களையும் ஊடுருவிகள் நேரலையாக ஒளிபரப்பினர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
ஊடுருவப்பட்ட எக்ஸ் கணக்கை 30லிருந்து 45 நிமிடங்களுக்குள் திரு ஷிண்டே அலுவலகத்தின் சமூக ஊடகப் பிரிவு மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.