திருவனந்தபுரம்: தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, திரையரங்கிற்குள் புகுந்து, பெண்களின் பணப்பைகளைத் திருடிய ஆடவரை இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பிடிபட்ட ஆடவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விபின், 30, என அடையாளம் காணப்பட்டது.
கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் உள்ள கங்கா திரையரங்கில் இரு பெண்களின் பணப்பைகளை விபின் களவாடியதாகச் சொல்லப்பட்டது.
அப்பெண்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைக் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அக்காணொளிகள் மூலம் விபினை அவர்கள் அடையாளம் கண்டனர்.
இதில் அதிர்ச்சி என்னவெனில், அரை நிர்வாண நிலையிலேயே விபின் தன் திருட்டை அரங்கேற்றியதுதான்.
எல்லாரும் ஆர்வமாகப் படம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் யாரைக் குறிவைப்பது என நோட்டம் பார்த்தார். இடைவேளையின்போது, அவர் தமது இலக்குகளை நெருங்கினார். யாருக்குப் பின்னால் காலி இருக்கைகள் இருந்தனவோ அவர்களையே விபின் குறிவைத்தார்.
பின்னர் தம் ஆடைகளைக் களைந்துவிட்டு, முழங்கால்களாலேயே ஊர்ந்து சென்று, இருக்கைகளுக்குப் பின்னால் இருந்தபடி, பணப்பைகளைத் திருடினார்.
எல்லாரும் படத்தில் மூழ்கியிருந்ததால் விபினை யாரும் கவனிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
நகரின் பல திரையரங்குகளிலும் இதுபோன்ற திருட்டு இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறைக்குப் புகார்கள் வந்துள்ளன. அதனால், அவ்வழக்குகளிலும் விபினுக்குத் தொடர்பிருக்கலாமெனக் காவல்துறை நம்புவதாக ‘மாத்ருபூமி’ செய்தி வெளியிட்டுள்ளது.