அறக்கட்டளை பெயரில் பாதி விலை மோசடி; கேரளாவில் பல இடங்களில் சோதனை

2 mins read
ce10bb26-b284-4651-861d-15d0156a6ba7
கேரளாவில், அனந்து கிருஷ்ணன் என்பவர், பாதி விலையில் ஸ்கூட்டர், கணினி தருவதாகப் பலரை ஏமாற்றி கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: விகடன்

திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கிப் பகுதியைச் சேர்ந்த 26 வயது அனந்த் கிருஷ்ணன் என்பவர், ஓர் அறக்கட்டளை மூலம் 170 தன்னார்வத் தொண்டூழிய அமைப்புகளை ஒன்றிணைத்து மாபெரும் கட்டமைப்பை உருவாக்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியைப் பெற்று பொதுமக்களுக்குப் பாதி விலையில் ஸ்கூட்டர், மடிக் கணினி, தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அனந்து கிருஷ்ணன் தொண்டூழிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

முதல் கட்டமாக ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் ரூ.60,000-க்கும், ரூ60,000 மதிப்புள்ள மடிக் கணினி ரூ.30 ஆயிரத்திற்கும் என சலுகை விலையான பாதி விலையில் விற்கப்படும் என்று அறிவிப்பு விடுத்தார். ஆனால், அதற்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதை நம்பி, ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு அவருடைய தொண்டூழிய அமைப்புகளிடம் பணத்தைக் கட்டி முன்பதிவு செய்துகொண்டனர்.

ஆனால், அவர்கள் கட்டிய பணத்திற்கான பொருள்கள் அவர்களின் கைக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையில், அனந்து, கேரளாவின் பல மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அனந்து கிருஷ்ணன், சாய் கிராமம் குளோபல் அறக்கட்டளைத் தலைவர் ஆனந்த் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் லாலி வின்சென்ட் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர்.

அனந்து கிருஷ்ணனின் ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.450 கோடிக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்று இருக்கிறது. அவர், பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது கேரளாவின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அனந்து கிருஷ்ணன் நன்கொடைகளை வழங்கியதும், பினாமி பெயர்களில் அவர் நன்கொடைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்