தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்காவது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறினார் ஹேமந்த் சோரன்

2 mins read
95a9e225-b03d-4cf6-a54d-1d9e65e508b5
ஜார்க்கண்டின் 14வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் புதன்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார். - படம்: இந்திய ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றது. அதனையடுத்து மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் (நவம்பர் 28) பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், இண்டியா கூட்டணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன.

இதையடுத்து, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி மீண்டும் தொடா்வது உறுதியானது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின.

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

தொடா்ந்து ஆளுநா் மாளிகையில் ஆளுநா் சந்தோஷ் கங்வாரியைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்.

அப்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் அவர் ஆளுநரிடம் அளித்தார்.

இதனையடுத்து, ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநா் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தாா்.

கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பீகாரைப் பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.

அந்த மாநிலத்தின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் நவம்பர் 28ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்