தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்களை மோசடி செய்த சகோதரர் கைது

1 mins read
3decd3af-1b3b-4aca-94ce-02b33fc00b07
குருணால் பாண்டியா (இடது), ஹார்திக் பாண்டியா சகோதரர்கள். - படம்: ஊடகம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா, குருணால் பாண்டியா சகோதரர்களை மோசடி செய்ததாக அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் பாண்டியாவைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

ஹார்திக் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்; தற்போது நடந்துவரும் ஐபிஎல் டி20 போட்டிகளிலும் மும்பை அணியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணிக்காக விளையாடியுள்ள குருணால், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஹார்திக் (40%), குருணால் (40%), வைபவ் (20%) மூவரும் இணைந்து பல்படிமத் தொழில் நிறுவனம் (பாலிமர்) ஒன்றைத் தொடங்கினர்.

அதன்மூலம் கிடைத்த லாபத்தை முதலீட்டிற்கு ஏற்றபடி மூவரும் பிரித்துக்கொண்டனர்.

இந்த நிலையில்தான் நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, வைபவ் அதே தொழிலில் மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அது குறித்து பாண்டியா சகோதரர்களிடம் அவர் தெரிவிக்கவில்லை.

மேலும், கூட்டு நிறுவனத்தின்மூலம் கிடைத்த லாபத்தையும் தனது நிறுவனத்தில் வைபவ் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், லாபத்தில் தன் பங்கையும் அவர் 33.3 விழுக்காடாக உயர்த்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் தெரியவர, பாண்டியா சகோதரர்களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது.

இந்நிலையில், ஹார்திக்கின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிடுவேன் என்று வைபவ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வைபவ் ரூ.4.3 கோடியைக் கையாடல் செய்துவிட்டதாக ஹார்திக், குருணால் இருவரும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, வைபவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்