புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பங்ளாதேஷ் குடிமக்கள், ரோஹிங்யாக்களுக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
இது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால் அவ்வாறு உதவுவோர் மீது டெல்லி போலிசார் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் திரு அமித் ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, காவல் ஆணையர் சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் அமித்ஷா, ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழையவும் அவர்கள் ஆவணங்களை உருவாக்கவும் அவர்கள் இங்கு தங்குவதற்கு வசதி செய்யவும் உதவும் முழு வலையமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என்றும் குற்றம் புரிவோரை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும் என்றார் திரு அமித்ஷா.
“இதுபோன்ற சட்டவிரோத கும்பல்களை இரக்கமின்றி ஒழிப்பது டெல்லி காவல்துறையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் தொடர்ந்து மோசமாக செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் துணைப் பிரிவுகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“போதைப்பொருள் வழக்குகளில் ‘மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் அணுகுமுறை’ மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் வலையமைப்புகள் அகற்றப்பட வேண்டும்,” என்றும் அமைச்சர் அமித்ஷா மேலும் தெரிவித்தார்.