ஹரியானா தேர்தல்: சுயேச்சையாகக் களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வரப் பெண்மணி

1 mins read
c5a6bf4d-1482-49fd-8c93-d2d15adddc0c
74 வயதாகும் சாவித்திரி ஜிண்டால், வியாழக்கிழமை (செப்டம்பர் 12) வேட்புமனுத் தாக்கல் செய்தார். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: இந்தியாவின் ஆகப் பணக்காரப் பெண்ணான சாவித்திரி ஜிண்டால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வரப் பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் அவர்.

ஒ.பி.ஜிண்டால் குழுமத் தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால், அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாக் கட்சியில் (பாஜக) இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு நவீன் வெற்றிபெற்றார்.

தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்திரி பிரசாரம் செய்தது நினைவுகூரத்தக்கது.

ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சாவித்திரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ளார் சாவித்திரி.

வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ஹிசார் தொகுதியில் அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும் மாநில அமைச்சருமான கமல் குப்தாவை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

சாவித்திரி ஜிண்டால், ஏற்கெனவே ஹிசார் தொகுதியில் 2005, 2009ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

குறிப்புச் சொற்கள்