புதுடெல்லி: ஹரியானா தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரபல மல்யுத்த வீரர்கள், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
புதன்கிழமை அன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் அவரைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் ஐம்பது கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்தது.
இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கான வெகுமதியும் மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஹரியானா தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்க சில அரசியல் கட்சிகள் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடலம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பஜ்ரங் புனியாவுக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ராகவ் சதா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபாலுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள் என காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி குறித்து விளக்கமளித்த இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா, கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 66 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஆம் ஆத்மி தனது கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சி, ஏழு தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க முன்வந்துள்ளது.