தானாக இயங்கி, கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் புகுந்த 'டிராக்டர்'

தானாக இயங்கி, கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் புகுந்த 'டிராக்டர்'

1 mins read
769671f6-54c3-4302-a42f-658799d73f8e
தானாகவே இயங்கி, கடைக்குள் புகுந்து சேதப்படுத்திய டிராக்டர். காணொளிப்படம் -

புதுடெல்லி: கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 'டிராக்டர்' வாகனம், எவரும் இயக்காமல் அதுவாகவே கிளம்பி, கண்ணாடியை உடைத்துக்கொண்டு காலணிக் கடைக்குள் புகுந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

எப்படி அந்த டிராக்டர் அதுவாக இயங்கியது என்பது தெரியவில்லை. இந்த நிகழ்வு முழுவதும் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகி இருக்கிறது.

இதன் தொடர்பில் புகாரளிக்கப்படவே, காவல்துறை விசாரித்து வருகிறது.

பிஜ்னோர் கோத்வாலி நகரக் காவல் நிலையத்திற்கு முன்புறத்திலேயே இது நிகழ்ந்துள்ளது.

'சமாதான் திவஸ்' என்ற நிகழ்ச்சிக்கு அந்தக் காவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக சிலர் காரிலும் சிலர் டிராக்டரிலும் வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவரான கிஷன் குமார் என்பவர் தமது டிராக்டரை அந்தக் காலணிக் கடையின்முன் நிறுத்தியிருந்தார்.

ஒரு மணி நேரமாக அசைவின்றி நின்றிருந்த அந்த டிராக்டர், திடீரெனத் தானாக இயங்கி, கடைக்குள் புகுந்து, சேதப்படுத்தியது. இதுகுறித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.